ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தையே பெயர்த்து எடுத்து காரில் கடத்திச் சென்று, அதிலிருந்த ரூ.28 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம கும்பலின் துணிகர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஏ.டி.எம். மையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்கள் மீது கருப்பு பெயிண்ட் அடித்து மறைத்துள்ளனர். பின்னர், தார்ப்பாய் கொண்டு ஏ.டி.எம். வாசலை மூடிவிட்டு, அதிநவீன கேஸ் கட்டர் கருவிகளைக் கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை அடியோடு பெயர்த்து எடுத்து, வெளியில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்றி தப்பியோடியுள்ளனர்.

மறுநாள் காலை ஏ.டி.எம். எந்திரம் இருந்த இடமே காலியாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி மற்றும் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சோதனையிட்டனர். முதற்கட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.28 லட்சம் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் தப்பியோடிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, குற்றவாளிகளைப் பிடிக்க ஆந்திர போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.