பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவில் கடுமையான வறட்சியும் உணவுப்பற்றாக்குறையும் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கணிப்புப்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு ‘எல் நினோ’ நிகழ்வு மிகவும் வலுவடைந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு மழையளவில் 75 சதவீதத்தை வழங்கும் தென்மேற்கு பருவமழை கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஜூன் தொடக்கத்திலேயே பருவமழையில் கணிசமான பற்றாக்குறை பதிவாகியுள்ளதால், இந்த வறட்சி நிலை நீடித்தால் நாட்டின் விவசாய சாகுபடி பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது.
இந்த கடுமையான பருவமழை பற்றாக்குறையால் மழையை மட்டுமே நம்பியுள்ள பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறி பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டு, உணவுப் பொருட்களின் விலைவாசி மேலும் உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போதிய மழையின்மை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயராமல் போனால், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், அணைக்கட்டுகளில் நீர்வரத்து குறைந்து மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்படும் சூழல் உருவாகலாம். மேலும், கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையால் பால் உற்பத்தியும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய விவசாயம் மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்ட இந்த ‘எல் நினோ’ தாக்கத்தை எதிர்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
