தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆத்திகுளம் கிராமம், சுடலைமாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (60). விவசாயியான இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவியும், திருமணமான ஐந்து மகள்களும் உள்ளனர். தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த வடிவேல், அண்மைக் காலமாக காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் விளைச்சல் பாதிக்கப்படுவதைக் கண்டு வேதனையடைந்தார்.
நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த தனது பயிர்களைக் காக்கும் பொருட்டு, தோட்டத்தில் கம்பிவேலி அமைத்து, அதற்கு மின் இணைப்பு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த (வியாழக்கிழமை) மாலையில் வடிவேல் தனது தோட்டத்திற்குச் சென்றபோது, மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் எதிர்பாராத விதமாக சிக்கியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாலையில் சென்ற கணவர் இரவு முழுவதும் வீடு திரும்பாததால், வெள்ளிக்கிழமை காலையில் அவரைத் தேடி தோட்டத்திற்குச் சென்ற மனைவி சுப்புத்தாய், வடிவேல் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த கோரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக கயத்தாறு காவல்துறையினருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர். அதன் பின்னர், காவல்துறையினர் வடிவேலின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிரைக் காக்க எடுத்த நடவடிக்கைக்கே உயிரை விட்ட விவசாயியின் சோக முடிவால் குடும்பத்தினரும், கிராம மக்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
