கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் மேலகுண்டா கிராமத்தை சேர்ந்த சங்கரின் 18 வயது மகள் கடந்த வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறி, உடனடியாக அவரது உடலை கிராம மக்கள் சடங்குகள் செய்த பின் அடக்கம் செய்தனர்.
ஆனால், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சங்கரின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சங்கர் கூறிய தகவல்களில் முரண்பாடு இருப்பதை பார்த்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்தனர்.
இதன்போது சோகமான உண்மை ஒன்று வெளியாகியுள்ளது. தனது மகள் வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலிப்பது தெரிய வந்த சங்கர், அந்த உறவை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் மகள் உறுதியாக இருந்ததால், “மற்ற மகள்களின் திருமண வாழ்க்கை பாதிக்கப்படும்” என்ற பயத்துடன், சங்கர் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
பின்னர், மகளின் வாயில் விஷம் ஊற்றி, தற்கொலை என உருவாக்கி கிராம மக்களை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் சங்கர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் அவரது உறவினர்கள் இருவர் தொடர்புடையவர்கள் என கூறப்படுவதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
