ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வந்த 36 வயதான சமஸ்கிருத ஆசிரியர் மீது அதே பள்ளியின் 7 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் குறைகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேரில் தெரிவிக்க, அவர் உடனடியாக காவல்துறையில் புகார் பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் பள்ளிக்கு விடுமுறை கடிதம் கொடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரை பிடிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும், முன்னதாகவே சில மாணவிகள் இவர்மீது இதுபோன்ற பாலியல் புகார்களை எழுப்பியதாகவும், அந்த நேரத்தில் பள்ளி நிர்வாகம் அவரை கண்டித்து அனுப்பியதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, இந்த புகார் மீதான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதுடன், ஆசிரியரை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.