சவூதி அரேபியாவில் வெறும் 5 நிமிட வீடியோ கால் அறிமுகத்தின் மூலம் காதலித்து, சுமார் 36 லட்சம் ரூபாய் (1,60,000 சவூதி ரியால்) வரை மிகப்பிரம்மாண்டமாகச் செலவு செய்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், கல்யாணமான 9-வது நாளே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள விசித்திரச் சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண்ணுடன் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வீடியோ காலில் பேசிவிட்டு, அவருடைய அழகில் மயங்கி உடனடியாகத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். பெண்ணின் வீட்டார் கேட்ட வரதட்சணை மற்றும் ஆடம்பரத் திருமணச் செலவுகள் என அனைத்தையும் அந்த வாலிபர் வாரி இறைத்துள்ளார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகுதான் அந்தப் பெண்ணின் உண்மையான குணமும், அவர் தன்னை ஒரு ஏமாற்றுக்காரப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டோம் என்பதையும் கணவர் உணர்ந்துள்ளார்.
அந்தப் பெண் தன் மீது எவ்வித அன்பும் காட்டாமல், எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மிரட்டி வந்ததால், பொறுமையிழந்த கணவர் திருமணமான 9 நாட்களிலேயே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இச்சம்பவம், அவசரக் காதலும், ஆன்லைன் மோகமும் வாழ்க்கையை எப்படி சீரழிக்கும் என்பதற்கு ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
