அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கேட்டி (Katy) பகுதியில், டெஸ்லா காரின் ‘ஆட்டோ பைலட்’ (Autopilot) எனப்படும் தானியங்கி ஓட்டுநர் உதவி தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட ஒரு பயங்கர விபத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல் பட்லர் என்ற 44 வயது நபர் தனது ‘டெஸ்லா மாடல் 3’ காரில் சென்றுகொண்டிருந்தபோது, சந்திப்பு ஒன்றில் திரும்பாமல் அதிவேகமாகச் சென்று சாலையோர வீட்டின் செங்கல் சுவரை உடைத்துக்கொண்டு கார் நேராக வீட்டிற்குள் புகுந்துள்ளது.

இந்த கோர விபத்தின்போது, அந்த வீட்டின் வரவேற்பு அறையில் நின்று கொண்டிருந்த மார்த்தா ஆவிலா என்ற 76 வயது மூதாட்டி மீது கார் பலமாக மோதியுள்ளது.

படுகாயமடைந்த அவர் உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தின் போது காரின் ஆட்டோ பைலட் வசதி ஆன் செய்யப்பட்டிருந்ததாக காரை ஓட்டிய நபர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மது அருந்தவில்லை என்றும், அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் ஹாரிஸ் கவுண்டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்து டெஸ்லா நிறுவன நிபுணர்களுடன் இணைந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் இச்சம்பவம், தற்போது சோசியல் மீடியாவில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.