பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 6 வயது சிறுமியான ஹிந்த் ரஜப், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரை மீட்க வந்த மருத்துவக் குழுவினர் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 52-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த முக்கிய கமாண்டர், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போர் நடவடிக்கைகளின் போது, இவர்களது டாங்கியை (Tank) குறிவைத்து ஹிஸ்புல்லா படைகள் நடத்திய துல்லியமான தாக்குதலில் 52-வது பட்டாலியனின் தற்போதைய கமாண்டரான லெப்டினன்ட் கர்னல் டோர் கெடாலியா பென் சிம்ஹான் (Lt. Col. Dor Gedalia Ben Simhon) மற்றும் அவருடன் இருந்த 3 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
உலகையே உலுக்கிய சிறுமி ஹிந்த் ரஜப்பின் மரணத்திற்கு காரணமான இந்த குறிப்பிட்ட இஸ்ரேல் ராணுவப் படைப்பிரிவின் கமாண்டர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருவது இது நான்காவது முறை என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்க எதிர்கொண்டு வரும் இந்த சர்ச்சைக்குரிய இஸ்ரேல் படைப்பிரிவின் புதிய கமாண்டர் ஹிஸ்புல்லா தாக்குதலில் பலியாகியுள்ள இச்சம்பவம், தற்போது சர்வதேச அரசியல் மற்றும் ராணுவ வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
