பிரான்சில் நடந்த ஜி7 (G7) மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நெருக்கமாகப் பழகிய வீடியோக்கள் வெளியான நிலையில், அவர்களுக்குள் திடீரென வெடித்துள்ள காரசாரமான வார்த்தைப் போர் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மாநாட்டின் போது மெலோனி என்னிடம் கெஞ்சித் தவித்துக் கேட்டுக்கொண்டதால் தான் நான் அவருடன் புகைப்படம் (Photo op) எடுத்துக் கொண்டேன்” என்று ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வம்பிழுக்க, இதற்கு மெலோனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்றும், தானோ அல்லது இத்தாலி நாடோ யாரிடமும் எப்போதும் கெஞ்சாது என்றும் சாடிய மெலோனி, ட்ரம்பின் இந்தத் தொடர் தேவையற்றத் தாக்குதல்கள் மிகவும் அர்த்தமற்றவை என்று விமர்சித்துள்ளார். மேலும், இத்தாலியில் தனது செல்வாக்கு சரிந்து வருவதாக ட்ரம்ப் ட்ரூத் சோசியல் (Truth Social) தளத்தில் வதந்தியைப் பரப்பியதற்குப் பதிலடி கொடுத்த மெலோனி, “என்னுடைய செல்வாக்கு மற்றும் ஜனரஞ்சகம் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை;
முதலில் உங்கள் வேலையில் மற்றும் உங்கள் செல்வாக்கில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என்று ட்ரம்பின் மூக்கு உடையும்படி நெத்தியடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் போர் விவகாரத்தில் இத்தாலி தங்களுக்கு ராணுவ ரீதியாக உதவவில்லை என்கிற கோபத்தில் ட்ரம்ப் இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இத்தாலி தரப்பு, தங்களின் வெளியுறவுத்துறை அமைச்சரின் அமெரிக்கப் பயணத்தையும் ரத்து செய்து ட்ரம்புக்குப் பலத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
