ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானின் உறுதியான நிலப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெற்று அச்சுறுத்தல்களுக்காகத் தங்கள் நாடு ஒருபோதும் யாசிக்காது என்றும், ஈரானை உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறிய நினைப்பது அமெரிக்காவின் ஏமாற்றத்தையே காட்டுகிறது என்றும் அதிபர் பெஷெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறந்தே இருக்கும், ஆனால் ஈரானின் நிலத்தையும் உரிமைகளையும் பறிக்க நினைப்பவர்களுக்கு இந்த நீர்வழிப்பாதை கண்டிப்பாக மூடப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்தத் துணிச்சலான பதில் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.