உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க ஈரான் தற்போது முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் தொடர்பில்லாத பிற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையை தடையின்றி பயன்படுத்தலாம் என்று ஈரான் பிரதிநிதி அலி மௌசவி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 22 நாட்களாக இந்தப் பாதை மூடப்பட்டிருந்ததால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை இந்தப் பாதை வழியாகவே பூர்த்தியாகிறது. இந்தப் போக்குவரத்து முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலராக உயர்ந்துள்ளதுடன் சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்திற்குள் இப்பாதையை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், ஈரான் தற்போது இணங்கி வந்துள்ளது. இருப்பினும், இந்தப் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
