அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் எந்தவித பிரம்மாண்டமான ஸ்டுடியோ அமைப்புகளும் இன்றி, இயற்கையின் மடியில் நின்றுகொண்டு பாடிய பாட்டு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படத்தின் பிரபலமான ‘சுபான் அல்லாஹ்’ பாடலை அவர்கள் மிக அழகாகத் தங்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளனர்.

சுற்றியும் பரந்து விரிந்திருக்கும் பசுமையான மலைகளும், மெல்லிய பனிமூட்டமும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசப் பின்னணியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் ஒரு சகோதரி சிறிய ஸ்பீக்கரில் ஒரிஜினல் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கேற்பத் தனது இனிமையான குரலில் பாட, மற்ற இரு சகோதரிகளும் அவர்களுக்குரிய தாளத்திற்கேற்பச் சிறிய நடன அசைவுகளுடன் பாடி அசத்தியுள்ளனர்.

எந்தவித செயற்கையான பாசாங்குகளும் இராமல், முழுக்க முழுக்கத் தங்களது இயல்பான சிரிப்போடும் கிராமத்துச் சூழலின் அழகோடும் அவர்கள் வெளிப்படுத்திய இந்தத் திறமை நெட்டிசன்களின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பலரும் அவர்களின் குரலில் உள்ள தூய்மையையும், அருணாச்சல பிரதேசத்தின் இயற்கை அழகையும் மனதாரப் பாராட்டி வருவதோடு, இதனைத் தொடர்ந்து ஷேர் செய்தும் வருகின்றனர்.