கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், இந்த வழக்கில் விரைவில் தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதால், அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
