இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதார அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் தமிழ்நாடு மாநிலம் வியக்கத்தக்க வகையில் 16% வளர்ச்சி விகிதத்தை எட்டிச் சாதனை படைத்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பெரிய மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சிப் போட்டியில், தமிழக அரசு நிலையான நிதி மேலாண்மை, சேவைத் துறை விரிவாக்கம் மற்றும் தொழில் துறை எழுச்சி ஆகியவற்றின் பலனாகத் தற்போது முன்னணி வகிக்கிறது. 16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற முன்னணி மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சாதனை, அண்மைக் காலமாகத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடுகள் சரியான திசையில் பயணிப்பதைக் காட்டுவதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வுக்குச் சாதகமாக அமையும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.