ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த இரவில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க சென்றன. நேற்று காலை கரை திரும்பிய மீனவர்களின் வலையில் சீலா, பாறை, மாவுலா, நகரை, மத்தி, காரல், சாளை உள்ளிட்ட பல வகை மீன்களுடன் கிளாத்தி மீன்கள் மட்டும் சுமார் 400 டன் அளவில் சிக்கியது. இதனை மீனவர்கள் கூடைகளில் அடைத்து இறங்குதளத்தில் விற்பனைக்காக குவித்து வைத்தனர்.
சுமார் 50 படகுகளில் சராசரியாக 4 டன் கிளாத்தி மீன்கள் சிக்கிய நிலையில், சில படகுகளில் 6 டன் வரை சிக்கியது. கிளாத்தி மீன்கள் மருத்துவ குணமுள்ளவை என்பதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கிச் சென்றனர். ஒரு கிலோ கிளாத்தி மீன் ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இதனால் பாம்பன் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மிகப்பெரிய அளவில் மீன்கள் இறங்கியதனால், மீன் இறங்குதளம் பரபரப்பாக காணப்பட்டது.
மீனவர்கள் கூறுகையில், “ஜூலை முதல் ஆகஸ்ட் இறுதிவரை மட்டுமே கிளாத்தி மீன் கிடைக்கும். கேரள கடல் பகுதியில் தடைக்காலம் இருந்ததால் பாம்பன் பகுதியில் கிளாத்தி மீன்கள் அதிகமாக சிக்கின. இப்போது கேரள கடலில் தடைக்காலம் முடிந்துவிட்டதால் இனிமேல் மீன்வரத்து குறையத் தொடங்கும்,” என தெரிவித்தனர். நேற்று ஒரே நாளில் பாம்பன் மீன் இறங்குதளத்தில் மட்டும் ரூ.8 கோடிக்கு மீன் விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
