கொழும்பில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை பரபரப்பு மோதலில், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் மிரட்டலான 77 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது.

ஹர்திக் பாண்டியா ‘டக் அவுட்’ ஆன போதிலும், கடைசி ஓவர்களில் ரன்கள் சேர்ந்ததால் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் அந்த அணியின் கேப்டன் சல்மான் அகா மற்றும் சைம் அயூப் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஆட்டத்தின் 5 ஓவர்களுக்குள்ளேயே 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறி வருகிறது. முன்னதாக டாஸின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கை குலுக்கிக் கொள்ளாதது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆட்டத்திலும் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.