மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரால் நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சசூன் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியாகி, பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
புனேவிலுள்ள சமர்த் காவல் நிலைய போலீசார், குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவத்திற்கு பிறகு குற்றவாளி கர்நாடகாவுக்கு தப்பியோடியதாகவும், அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த காவல் ஆய்வாளர் உத்தம் கித்தே கூறுகையில், “சிறுமியின் உறவினரை கைது செய்ய முயற்சி செய்து வருகிறோம். அவர் கைது செய்யப்பட்டவுடன் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுவார். சிறுமிக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றிய தகவல் தற்போது உறுதியாக சொல்ல முடியாது,” என்றார்.
இந்நிலையில் இது குறித்த விசாரணையில் தெரிந்ததாவது, புனே மாவட்டத்தின் காத்கி பகுதியில் சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். தாயார் வீட்டு வேலை செய்து வந்ததாகவும், அதிலிருந்து கிடைத்த குறைந்த வருமானத்தில் மகளை படிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு, சிறுமி வயது 14 ஆக இருந்தபோது, தொலைபேசி வழியாக அந்த தூரத்து உறவினர் அவளைத் தொடர்புகொண்டுள்ளார். தொடர்ந்து பேசிக்கொண்டே அவளை ஆசை வார்த்தைகளால் கவர்ந்துள்ளார். பின்னர், கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
நான்கு ஆண்டுகளாக இது தொடர்ந்து நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போன நிலையில், காத்கி காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்புக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் சிறுமி எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, சிறுமி தனது தாயாரிடம், தூரத்து உறவினர் தான் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். தகவல் அறிந்த குற்றவாளி அதிர்ச்சி அடைந்து தப்பியோடியுள்ளார். மேலும் அவரை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
