கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சீனிகுலி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பரதுவயலி எல்ரோஸ், நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டருகே உள்ள கிணற்றுப் பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனால் உதவிக்காக அவர் உரத்த கூச்சலிட்டார், ஆனால் அவரது குடும்பத்தினரோ அல்லது அருகில் உள்ளவர்களோ இதை அறியவில்லை. இதனால், இரவு முழுவதும் கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளித்தார் எல்ரோஸ்.

மறுநாள் காலை 8 மணியளவில், கிணற்றின் அருகே சென்றவர்கள் எல்ரோசின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு, கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தனர். அங்கு அவர் தத்தளிப்பதைக் கண்டு, உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 12 மணி நேரமாக கிணற்றில் தவித்த எல்ரோசை மீட்டனர். பின்னர், அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.