உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கேட்கவே நெஞ்சை பதறவைக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 72 வயதான உதய பானு விஸ்வாஸ் என்பவர், உயிரிழந்த தனது 35 வயது மகளின் உடலை அடக்கம் செய்யாமல், கடந்த நான்கு மாதங்களாக வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே அவரது மகள் பிரியங்கா உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், யாரிடமும் சொல்லாமல் உடலை ஒரு அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

​உடல் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, அந்த அறை முழுவதும் குப்பைகளை நிரப்பியும், வாசனை திரவியங்களை (Perfume) தெளித்தும் அந்த முதியவர் மறைத்துள்ளார். உறவினர்கள் கேட்டபோது மகள் டேராடூனில் சிகிச்சையில் இருப்பதாக பொய் சொல்லி சமாளித்துள்ளார். சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க, வீட்டை உடைத்துப் பார்த்தபோது அங்கு எலும்புக்கூடாகக் கிடந்த பிரியங்காவின் உடலைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தற்போது அந்த முதியவரை கைது செய்துள்ள போலீசார், அவருக்கு மனநலப் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.