புனேயில் பெற்ற தந்தை ஒருவரே தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சாகர் ஷிண்டே என்ற நபர், தனது 5 வயது மகன் ஆர்யன் மற்றும் 3 வயது மகள் ஹர்ஷதாவைச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவரையும் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதில், சிறுமி ஹர்ஷதா பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக மகன் ஆர்யன் தப்பியோடி காட்டில் அழுதுகொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் அவனைக் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சாகர் ஷிண்டே தனது மகளைக் கொன்று உடலை வனப்பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

தன் மகனின் இந்த குரூரமான செயலால் அதிர்ச்சியடைந்த தந்தை சதாசிவ ஷிண்டே, “இப்படிப்பட்ட கொடூரமான மகனைத் தூக்கிலிட வேண்டும்” என்று கதறி அழுது போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சாகரின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு அவரை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், கடன் சுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தனது மகளைக் கொன்ற பிறகு, எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி சாகர் சலூன் கடைக்குச் சென்று முடிவெட்டிக்கொண்டு வந்ததாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது போலீசார் சாகர் ஷிண்டேவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.