தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரையிலான அகலவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மற்றும் மின்னணு தீர்வு சேவை மூலமாக வழங்க வேண்டும்.

அதன்படி அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும்,  பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், ஊதிய அட்டவணையில் உள்ள சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய் துறையில் உள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், எழுத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் இந்த அகலவிலைப்படி உயர்வு பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது .