அதிமுக ஒன்றிணைந்தால்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, “அதிமுகவுடன் இனி இணைவதில்லை” என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவு தனக்கு இருப்பதால், அதிமுகவில் மீண்டும் இணைவது சாத்தியம் என்ற நம்பிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பாஜக மேலிடம் முயற்சிகளும் மேற்கொண்டது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைப்பதை  மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) தன்னுடைய அணியாவது சேர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்க முன்வந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், நேற்று சென்னையில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து நிர்வாகிகளின் கருத்து கேட்கப்பட்டது.

இதற்காக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் திமுக மற்றும் தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆகிய கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்ற நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள் 80 பேரில் 72 பேரும், மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே திமுக கூட்டணிக்கு செல்வது எதிர்காலத்திற்கு நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையான நிர்வாகிகளின் விருப்பத்தை மதித்து, அதிமுகவுடன் இனி இணைவதில்லை என்ற முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே அவர் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தவெகவுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவும், சட்டப்பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகள் வரை கேட்கவும் ஓ.பன்னீர்செல்வம் அணி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.