ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மல்லை சத்யா, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவை நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

“ஒரே நாளில் விளக்கக் கடிதம் அனுப்பி, அதே நாளில் கட்சி நடவடிக்கையும் எடுக்க முடிகிறதா? இது ஜனநாயக படுகொலையா இல்லையா?” என வினவிய அவர், “மரண தண்டனை கைதிக்கே கூட அவகாசம் தரப்படுகிறது. ஆனால் எனக்கோ அவ்வளவு கூட மனம் வரவில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தனது நீக்க நடவடிக்கைக்கு பின்னால் துரை வைகோவின் ஆதிக்கமே காரணமாக உள்ளது என்றும், “நான் துரோகி இல்லை, கட்சி கட்டுப்பாட்டை மீறவும் இல்லை. ஆனால் துரை வைகோவை கட்டுப்படுத்த முடியாமல், 32 ஆண்டுகளாக உழைத்த எங்களை நீக்குகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், “வைகோ மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும், நாங்கள் ஒரு வார்த்தையும் நம்பவில்லை. ஆனால் எங்களைப் பற்றி யாராவது கூறினால் நம்புகிறீர்கள். உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கான விலையை நிச்சயம் மக்கள் கட்டுவார்கள்” என கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.