வங்காளதேசத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கான பணத்தைக் கேட்ட இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு வந்த சொகுசு கார் ஒன்றில் சுமார் 3,000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, பணம் தராமல் தப்ப முயன்றவர்களை அங்கிருந்த ஊழியர் ரிபோன் சஹா தடுத்து நிறுத்தி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர், ரிபோன் சஹா மீது காரை ஏற்றி அவரைக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வங்காளதேச போலீசார், சொகுசு காரின் உரிமையாளரான அபுல் ஹாசிம் மற்றும் ஓட்டுநர் கமல் உசைன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அபுல் ஹாசிம் ஒரு ஒப்பந்ததாரர் என்பதோடு, வங்காளதேச தேசியவாத கட்சியின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வங்காளதேசத்தில் அண்மைக்காலமாக சிறுபான்மையினரான இந்துக்கள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் பங்க் ஊழியர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்நாட்டு இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.