வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், வரதட்சணை கொடுமைக்கு ஆளான ஒரு பெண், கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து நேரில் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நர்கீஸ் என்ற பெண், தனது மனுவில் கூறியிருப்பதாவது: “திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம், பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாபா என்பவரது மகன் காஜா ரபியை, கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்தின் போது என் பெற்றோர் 30 பவுன் நகை, இருசக்கர வாகனம், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், திருமண செலவுக்காக மொத்தம் ரூ.6 லட்சம் அளித்தனர்.

அதற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த மாதம் என் கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு, என்னை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால், எனக்கு இடுப்பு மற்றும் இரு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதுவரை உறவினர்களிடம் கடன் பெற்று சிகிச்சைக்காக மட்டும் ரூ.6 லட்சம் செலவழித்துள்ளேன்.

இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை, கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி நேரில் சென்று பெற்றுக் கொண்டார். இந்த மனு மீதான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற சம்பவங்கள், சமூகத்தில் இன்னும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் குறித்து கவனத்தை திருப்பி விடுகிறது.