இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாகக் கருதப்படும் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தல், வெறும் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, மகாராஷ்டிரா அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு போர்க்களமாகவே பார்க்கப்பட்டது. குறிப்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இரு சகோதரர்களும் கைகோர்த்து, தங்களின் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டப் போராடி வரும் சூழலில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
3.48 கோடி வாக்காளர்கள் தீர்மானித்த இந்த முடிவுகள், மகாராஷ்டிராவின் அதிகார மையங்கள் யாரிடம் இருக்கப் போகிறது என்பதைத் தெளிவுபடுத்தத் தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மும்பையில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி முன்னிலை வகித்தாலும், தாக்கரே சகோதரர்களின் கூட்டணியும் கணிசமான இடங்களில் முன்னிலையில் இருந்து கடும் போட்டியை அளித்து வருகின்றன.
நவி மும்பை, நாக்பூர், புனே மற்றும் தானே எனப் பல முக்கிய மாநகராட்சிகளிலும் பாஜக கூட்டணியே முன்னிலை வகிப்பது, அம்மாநில அரசியலில் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றை மாற்றி அமைக்கும் அறிகுறியாகத் தெரிகிறது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தனித்து நின்றாலும், பாஜகவின் பலமான கூட்டணியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன. ஒட்டுமொத்தத்தில், இந்தத் தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிராவில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.
