தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (ஜனவரி 16, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான 10 பேர் கொண்ட பிரசார பணிக்குழுவை அறிவித்துள்ளார். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதலிடத்தில் இருக்க, அவருக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனாவுக்கு அடுத்த இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது தான் இப்போது ஹாட் டாபிக்! ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கே தேர்தல் வியூகங்களில் வழிகாட்டியாக இருந்த ஒரு சீனியர் தலைவரை, அரசியலுக்குப் புதியவரான ஆதவ் அர்ஜுனாவுக்குக் கீழே வரிசைப்படுத்தியது செங்கோட்டையன் ஆதரவாளர்களை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.
”அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அரை நூற்றாண்டு கால அனுபவம் கொண்ட ஆளுமையை விஜய் மட்டுப்படுத்துகிறாரா?” என ஒரு தரப்பினர் காரசாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்தபடியாக செங்கோட்டையன் தான் கட்சியின் ‘நம்பர் 3’ இடத்தைப் பிடிப்பார் என்று மேடைகளில் முழங்கிய அவரது ஆதரவாளர்களுக்கு, இந்தப் பட்டியல் ஒரு பெரிய அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது. இருப்பினும், விஜய்யின் இந்த ‘மாடர்ன் பாலிடிக்ஸ்’ கணக்கு, அனுபவத்தை விட இளமைக்கும், புதிய வியூகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறதோ என்ற விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.
