சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை மக்கள் அருந்தி உள்ளனர். இதனால் 57 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதன் பின் கிண்டி கிங் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் கூறியதாவது, பொது விநியோகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக சுத்தகரிக்கப்பட்டு தான் வழங்கப்படுகிறது. ஆனால் குழாய் குடிநீர், குழாயில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து விடுகிறது.

இதனால் சேதமடைந்த குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இது மழைக்காலம் என்ற காரணத்தால், குடிநீரின் தரம் குறைவாக இருப்பதினால் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எங்கெல்லாம் புகார் வருகிறதோ, அங்கெல்லாம் குடிநீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு, சோதனை செய்யப்படுகிறது. அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சுழற்சி முறையில் தினமும் 10 குடியிருப்பு பகுதிக்குள் சென்று அங்கு வழங்கப்படும் குடிநீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டும். மழை பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இதை செயல்படுத்த வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.