சூர்யகுமார் யாதவ் தலைமையில் தோல்வியே காணாத அணியாக வலம் வந்த இந்திய அணி, நடப்பு 2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த படுதோல்வி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்களின் செயல்பாடு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. துணைக் கேப்டன் அக்ஷர் படேலைத் தவிர்த்துவிட்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆகாஷ் சோப்ரா போன்ற வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 2 ஓவர்களில் 17 ரன்களை வாரி வழங்கிய அவர், பேட்டிங்கிலும் 11 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். இடதுகை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த இவர் கொண்டுவரப்பட்டாலும், அது பலன் அளிக்கவில்லை.
இந்திய அணியின் அதிரடி மன்னனாகப் பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கிற்கு இந்தத் தொடர் ஒரு மறக்க முடியாத கசப்பான அனுபவமாகவே அமைந்துள்ளது. 5 போட்டிகளில் விளையாடி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள இவரது சராசரி 8 மற்றும் ஸ்டிரைக் ரேட் 82.76 ஆக சரிந்துள்ளது. அவரை 8-வது வரிசையில் களமிறக்கி அவரது திறமையை நிர்வாகம் வீணடிப்பதாக ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும், தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் அவருக்குப் பதிலாக ஒரு ஆல்-ரவுண்டரை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்பட்டது அவரது ஃபார்மை வெகுவாகப் பாதித்துள்ளது. கடந்த நியூசிலாந்து தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கி சொதப்பிய அவர், அதன்பின் இஷான் கிஷனிடம் தனது இடத்தை இழந்தார். குரூப் சுற்றில் நமீபியாவுக்கு எதிராக 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தாலும், ஒரு பெரிய ஸ்கோரை அவரால் எட்ட முடியவில்லை. இதனால் உலகக் கோப்பைக்குப் பிறகு சஞ்சு சாம்சனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியும் நிறுத்தினால் அரை இறுதி உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
