நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-8 சுற்றில் தொடர் தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா, ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

அதாவது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர்-8 சுற்று ஆட்டங்களில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இலங்கை அணி அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் கனவு தகர்ந்ததுடன், புள்ளிப் பட்டியலிலும் பின் தங்கியது. தங்களது வெளியேற்றம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கேப்டன் தசுன் ஷனகா, ரசிகர்களின் கோபத்தையும் வேதனையையும் தான் உணர்வதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

“நீங்கள் எங்களிடம் எதை எதிர்பார்த்தீர்களோ, அதை எங்களால் வழங்க முடியவில்லை. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தற்போதைய பின்னடைவை எங்களால் நிச்சயம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. என் மீதும், அணி மீதும் உங்களுக்கு இருக்கும் நியாயமான கோபத்தையும், வேதனையையும் நான் நன்கு அறிவேன். உங்கள் விமர்சனங்கள் அனைத்தையும் நான் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இலங்கை வீரர்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை மட்டும் தயவுசெய்து கைவிட்டுவிடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் முன்னணி அணிகளிடம் இலங்கை அணி சரணடைந்த விதம் அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ரசிகர்களின் ஆதரவைத் தொடர்ந்து கோரியுள்ள ஷனகாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.