ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இளம் அதிரடி மன்னன் வைபவ் சூர்யவன்ஷி தனது பேட்டிங்கால் மீண்டும் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். டி.ஒய் பாட்டில் டி20 தொடரில் இந்திய கடற்படைக்கு எதிரான போட்டியில், வெறும் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த இந்திய கடற்படை அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. கடினமான இந்த இலக்கை நோக்கி டி.ஒய் பாட்டில் புளூ அணிக்காகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார்.
அவர் மொத்தம் 19 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 331.58 என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து, ரன் சேஸிங்கில் இருந்த அழுத்தத்தை முழுமையாகக் குறைத்தார்.
14 ball 50 for Vaibhav Suryavanshi 👀 against the Indian Navy in the DY PATIL T20 CUP pic.twitter.com/KAcl0UOJ3V
— Rithik Rajeev Yadav (@Rithikdb5) February 26, 2026
வைபவ் அமைத்துக் கொடுத்த அதிரடி அடித்தளத்தை வெற்றியாக மாற்றினார் அர்ஜுன் டெண்டுல்கர். 7-வது வீரராகக் களமிறங்கிய அர்ஜுன், 29 பந்துகளில் 55 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். வைபவ் – அர்ஜுன் கூட்டணி இணைந்து 48 பந்துகளில் 118 ரன்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தது.
ஏற்கனவே 14 வயதில் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்த வைபவ், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ளார். மேலும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் காட்டி வரும் இந்த ஃபார்ம், ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
