சமீபகாலமாக திருமணத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, ஆனால் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. போலி அடையாளங்களை உருவாக்கி, சுமார் 25 பெண்களைத் திருமண ஆசையில் வீழ்த்தி கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றிய பிரகர் திரிவேதி என்பவரின் கோர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், உத்தரப் பிரதேசத்தின் சேவதா தொகுதி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரான ஞான் திவாரியின் மகளையும் இந்த நபர் ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதுதான். மக்கள் பிரதிநிதியான ஒரு சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்திற்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்ற கேள்வியை இந்தச் சம்பவம் சமூகத்தில் எழுப்பியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஞான் திவாரியின் மகள் டாக்டர் பிரக்யா திவாரிக்கும், பிரகர் திரிவேதிக்கும் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டத் திருமணம் நடைபெற்றது. திருமணம் பேசி முடிக்கும்போது, தான் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், சமூகத்தில் பெரும் செல்வாக்கு படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் பிரகர் திரிவேதியும் அவரது தந்தை அனுஜ் திரிவேதியும் பொய் உரைகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.
உள்ளூர் அளவில் விசாரித்தபோதும், சில முக்கியப் பிரமுகர்கள் இவர்களைப் பற்றி சாதகமாகப் பேசியதால் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்துள்ளனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகுதான் பிரகரின் உண்மையான சுயரூபம் தெரியவரத் தொடங்கியது. தன் மீதுள்ள குற்றப் பின்னணிகளையும், ஏற்கெனவே பல பெண்களை ஏமாற்றியிருந்த விவரங்களையும் அவர் முற்றிலும் மறைத்து இந்த நாடகத்தை ஆடியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் பிரகர் திரிவேதியின் பின்னணியைத் தோண்டியபோதுதான், அவர் மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனது போலி அடையாளங்களைப் பயன்படுத்தி சுமார் 25 பெண்களைத் திருமணம் செய்து, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய அதிர்ச்சித் தகவல் அம்பலமானது.
சினிமா பாணியில் பெண்களைத் தனது வசீகரப் பேச்சால் மயக்கி மோசடி செய்து வந்த இந்த நபரின் உண்மையான முகம் தெரிந்தவுடன், சட்டமன்ற உறுப்பினர் ஞான் திவாரி தனது மகளை உடனடியாகத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து, அந்தப் போலி குடும்பத்துடனான அனைத்துச் சமூக மற்றும் தனிப்பட்ட உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். மேலும், இந்த ஏமாற்று வேலையால் தங்கள் குடும்பம் பெரும் மன உளைச்சலுக்கும், சமூகத்தில் அவப்பெயருக்கும் ஆளானதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
