அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டேன். நான் சென்ற இடங்களில் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். இதை பார்க்கும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமல்ல அந்த அரசியல் மாற்றத்தை அதிமுகவால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். நான் விவசாயி என்பதால் 8 மாசத்துக்கு முன்பே சரியான நேரத்தில் முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறேன்.
அது அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும். தாமதமாகிவிட்டால் 234 தொகுதிகளுக்கும் செல்ல முடியாது. அதனால் தான் இப்பவே மக்களை சந்தித்து வருகிறேன். அதிமுக பாஜக கூட்டணி அமைத்து இருப்பதால் திமுக பயந்து போய் உள்ளது. இதனால்தான் பாஜக ஆட்சியில் பங்கு கேட்பதாக திமுகவினர் திட்டமிட்டு வதந்தி பரப்பி இருக்கிறார்கள். இதையும் மீறி அதிமுக கூட்டணி வெற்றி பெறும். 210 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் எங்களுக்கு தெரிவிக்கும் ஆதரவை பார்த்து நான் பார்த்து தான் இதை நான் சொல்கிறேன்.
திமுகவை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்க ஒருமித்த கருத்துள்ள காட்சிகள் அனைத்தும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என்று முன்பு கூறியிருந்தேன். அதை பல கட்சிகள் நிராகரித்து விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன. நான் என்ன சொன்னேன் என்பதை புரிந்து கொள்ளவில்லை. நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவும் இல்லை. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் கட்சிகள் எங்களுடன் சேர்ந்து திரள வேண்டும் என்று தான் கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார்.
