சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா போன்ற பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. அது தொடர்பான தரவுகள் மற்றும் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி புள்ளி விவரங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 16 இடங்களை வெல்வோம் என எங்கள் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. ஆனால் நாங்கள் 9 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். எனவே நாங்கள் தோல்வி பெற்ற 7 தொகுதிகளில் இருந்து மகாதேவபுரம் என்ற ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்து பார்த்தோம்.

அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மட்டுமே சுமார் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நாங்கள் 5 வெவ்வேறு வழிகளில் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் 11,965 போலியான வாக்காளர்களும், 40,099 வாக்காளர்கள்‌ தவறான முகவரியுடனும், 10,452 வாக்காளர்கள் ஒரே முகவரி கொண்ட வாக்காளர்களாகவும், 4,132 வாக்காளர்கள் தவறான புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தியும் தெரியவந்தது.

மேலும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6- ஐ 33,692 வாக்காளர்கள் தவறாக பயன்படுத்தியதாக தெரிந்தது. வாக்காளர் அடையாள அட்டை பதிவின் படி ஒரு கட்டிடத்தில் 50 முதல் 60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து அரியானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடந்த தேர்தல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இது போன்ற கருத்துக்கணிப்புகள் நமக்கு ஏதோ ஒன்றை சொல்வதாக கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு திருத்தம் மூலம் 65 வாக்காளர்களை தேர்வு ஆணையம் நீக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.