அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்றும், தகுதியுள்ளவர்களுக்குப் பதவிகள் தேடி வரும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுகவை ஒரு ‘கார்ப்பரேட் கம்பெனி’ என்று கடுமையாகச் சாடிய அவர், அதிமுக மட்டுமே சாமானியர்களும் உயர்பதவிக்கு வரக்கூடிய ஜனநாயகக் கட்சி என்று பெருமிதத்துடன் கூறினார். திமுகவில் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அதிகாரம் கிடைப்பதாகவும், மற்றவர்களுக்கு அங்கு இடமில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் 8 கோடி மக்களைச் சுரண்டி ஒரு குடும்பம் மட்டுமே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த இபிஎஸ், திமுகவின் இந்த வாரிசு அரசியலுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று உறுதிபடக் கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தின் போது பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசால் நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
