மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களால் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தங்களை மீண்டும் இணைக்கப் பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தியும் பலன் கிடைக்காத நிலையில், தற்போது சசிகலா தனிப்பாதை எடுக்கத் தொடங்கியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா, கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சசிகலாவின் ஆதரவாளர்கள் புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்து கொடியேற்றியுள்ளனர். குரு முருகானந்தம், திலகராஜ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இணைந்து இந்த அலுவலகத்தைத் தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் இதுபோல கிளை அலுவலகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ள சசிகலா தரப்பு, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், சசிகலாவின் இந்தப் புதிய அரசியல் முன்னெடுப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
