அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசாரப்பயணத்தின் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் சட்டமன்ற தொகுதி வாரியாக மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த எழுச்சி பயணத்தின் 15-வது நாளான நேற்று, அவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நேரத்தில், திமுக அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த இபிஎஸ், “அனைத்து துறைகளிலும் ஊழல் வேரூன்றியுள்ளது. நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை என்றால், மக்களின் நிலை என்ன?” என கேள்வி எழுப்பினார். மேலும், மக்கள் மத்தியில் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை வெளிக்கொணரும் வகையில் “உருட்டுகளும் திருட்டுகளும்” என்ற புதிய பிரசாரப்பெயரை அறிமுகப்படுத்தினார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “46 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளேன். அவர்களின் ஆதரவு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் உருவாகும் கூட்டணிக்கு பெரிய வெற்றியை உறுதி செய்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “பிரதமர் நரேந்திர மோடியை எப்போது சந்திப்பது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தோம் என்பதிலேயே ஏதும் தவறு இல்லை” எனக் கூறினார்.

“>

 

தற்போதைய திமுக ஆட்சியில் மக்களின் பிரச்சனைகள் அக்கறையுடன் கேட்கப்படவில்லையென விமர்சித்த இபிஎஸ், நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்றார். திமுக அரசு வழங்கிய பல அறிவிப்புகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அதைப் பற்றிய துண்டுப் பிரசுரங்கள் விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எப்போது வர வேண்டுமோ, அப்போது வருவார்கள்” எனவும், திமுக கூட்டணியை உடைக்கும் முயற்சி அவர்களிடம்தான் இருந்து வருகிறது என்றும் கடைசியில் சுட்டிக்காட்டினார்.