சீனாவில் 32 வயது வாலிபர் ஒருவரின் வயிற்றுக்குள் கடந்த 20 ஆண்டுகளாக உடையாமல் இருந்த தெர்மோமீட்டரை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ‘வாங்’ (32) என்ற நபர், கடந்த சில நாட்களாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலியின் தீவிரம் அதிகமானதையடுத்து, அவர் வென்சோ மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, அவரது சிறுகுடலின் தொடக்கப் பகுதியான ‘டியோடினம்’ (Duodenum) பகுதியில் நீண்ட கூர்மையான பொருள் ஒன்று இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தீவிர விசாரணைக்குப் பின் வாங் அளித்த வாக்குமூலம் மருத்துவர்களை உறைய வைத்தது. அவர் கூறியதாவது, எனக்கு 12 வயதாக இருக்கும்போது தற்செயலாக இந்த தெர்மோமீட்டரை விழுங்கிவிட்டேன். பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில் யாரிடமும் சொல்லவில்லை. எந்த வலியும் இல்லாததால் நாளடைவில் அதை அப்படியே மறந்துவிட்டேன்என்று அவர் கூறியுள்ளார்.
தெர்மோமீட்டரின் முனை குடல் சுவரை அழுத்திக் கொண்டிருந்ததால், எந்த நேரத்திலும் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதையடுத்து, பித்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்த அந்தத் தெர்மோமீட்டரை, மருத்துவர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி மிக நுணுக்கமாக வெளியே எடுத்தனர்.
வெளியே எடுக்கப்பட்ட அந்தத் தெர்மோமீட்டர், 20 ஆண்டுகளுக்குப் பிறகும் உடையாமல் முழுமையாக இருந்தது. அதில் இருந்த எண்கள் மட்டுமே தேய்ந்திருந்தன. ஒருவேளை அந்த தெர்மோமீட்டர் உடைந்திருந்தால், அதிலுள்ள பாதரசம் ரத்தத்தில் கலந்து உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். “வாங் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி” என்று அவரைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சீனாவில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் இதுபோன்ற விபரீதங்களால் மருத்துவமனைக்கு வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தவறுதலாக ஏதேனும் பொருட்களை விழுங்கிவிட்டால், உடனடியாக உணவு உட்கொள்வதைத் தவிர்த்துவிட்டு மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதேபோல கடந்த ஆண்டு சீனாவில் 64 வயது முதியவர் ஒருவரின் வயிற்றிலிருந்து, அவர் 52 ஆண்டுகளுக்கு முன் விழுங்கிய ‘டூத் பிரஷ்’ அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
