திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சதுப்பேரிபாளையத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் மோனிஷா, விடுமுறை நாளை பயன்படுத்தி நீச்சல் கற்றுக்கொள்ள ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்கு சென்றனர். அவர்களுடன் தோழிகளான தன்ஷிகா மற்றும் ஹன்சிகாவும் சென்றிருந்தனர். அனைவரும் ஆரணி அருகேயுள்ள தச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து வந்த மாணவிகள்.
நீச்சல் பழகிக் கொண்டிருந்தபோது, சிவரஞ்சனி மற்றும் மோனிஷாவின் உடைகள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அவர்கள் தத்தளிக்க ஆரம்பித்தனர். உடனடியாக மற்ற இரு மாணவிகள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் அவர்கள் கிணற்றிலிருந்து வெளியே வந்து கூச்சலிட்டனர். அருகிலுள்ள விவசாயிகள் ஓடி வந்து கிணற்றில் மாணவிகளை தேடி காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் வெற்றியடையவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், ஆரணி தீயணைப்பு நிலையத்திலிருந்து அலுவலர் பூபாலன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து கிணற்றிலிருந்து மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் மோனிஷாவின் சடலங்களை மீட்டனர். பின்னர் களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து, சடலங்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவிகளின் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
