நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு அரசு பேருந்து அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து டிரைவரும் ஒரு பயணியும் பரிதாபமாக இறந்து விட்டனர். சில பயணிகள் மின்சாரம் தாக்கியதால் மயங்கினர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 15-ஆம் தேதி அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் நாகராஜ், பேருந்தில் பயணம் செய்த பாலாஜி ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். நாகராஜ் மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என அதில் கூறப்பட்டுள்ளது.