வீட்டின் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன், அங்கு மறைந்திருந்த நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜிநகர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானேஸ்வர் தாண்ட்கே. இவருடைய இரண்டு வயது மகன் சம்பு ஞானேஸ்வர் தாண்ட்கே. ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் படிக்கட்டுகளில் அந்தச் சிறுவன் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, கோடை வெப்பம் காரணமாகப் படிக்கட்டின் ஓரத்தில் இருட்டில் மறைந்திருந்த நாகப்பாம்பு ஒன்றைச் சிறுவன் கவனிக்கவில்லை.

சிறுவனின் கால் எதிர்பாராதவிதமாகப் பாம்பின் மீது பட்டவுடன், அந்தப் பாம்பு அவனை பலமாகக் கடித்தது. வலியால் சிறுவன் அலறிய சத்தம் கேட்டு அவனது தாய் ஓடிவந்தார். சிறுவனின் காலில் இருந்து ரத்தம் வழிவதையும், அருகில் நாகப்பாம்பு இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பதறியபடி சிறுவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

பெற்றோர்கள் தங்கள் ஒரே மகனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சிறுவனின் மறைவுச் செய்தியைக் கேட்ட தாய், மகனின் உடலைக் கட்டியணைத்து அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கல்நெஞ்சையும் கரைய வைத்தது. அந்த வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது. கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், வெப்பத்தைத் தணிக்கப் பாம்புகள் மற்றும் தேள்கள் போன்ற விஷ ஜந்துக்கள் புதர்களில் இருந்தும் நிலத்தடிப் பகுதிகளில் இருந்தும் வெளியேறி, வீட்டின் குளிர்ந்த இடங்களான படிக்கட்டுகள், குளியலறைகள் மற்றும் இருட்டான பகுதிகளில் தஞ்சம் புக வாய்ப்புள்ளது.

எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட விடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வீட்டின் மூலைமுடுக்குகளில் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.