அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘ஜாம்பி டிரக்’ (Zombie Drug) கலாச்சாரம், தற்போது மகாராஷ்டிராவிலும் பரவியுள்ளதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதாவது பயந்தர் மேற்கு பகுதியில் உள்ள 90 அடி சாலையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், நபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில், ஒரு சிலையைப் போல அசையாமல் நீண்ட நேரம் நிற்பது பதிவாகியுள்ளது. சுற்றியுள்ள மனிதர்களையோ, வாகனங்களையோ கவனிக்காமல், ஒருவித மயக்க நிலையில் அவர் இருப்பதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பயந்தரின் ஜாங்கிட் காம்ப்ளக்ஸ் (Jangid Complex) சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரவு நேரங்களில் போதைப்பொருட்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நிலைமை கைமீறிப் போவதற்கு முன், காவல்துறை தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள், மனித உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், ஒரு ஜாம்பியைப் போல (உயிருள்ள பிணம்) அசைவற்று நின்றுகொண்டோ அல்லது வினோதமான முறையில் நகர்ந்துகொண்டோ இருப்பார்கள். இதைப் பயன்படுத்துபவர்கள் சுற்றுப்புறத்தை உணரும் திறனை முற்றிலும் இழந்துவிடுவார்கள் என்பதால் இது ‘ஜாம்பி டிரக்’ என அழைக்கப்படுகிறது.
What is Narcotics bureau and govt agencies doing , this Zombie drug is rapidly making it way to many Indian cities
This video is from Bhayandar , Mumbai where a man can be seen intoxicated by Zombie Drug . pic.twitter.com/NDiGST1OfX
— Amitabh Chaudhary (@MithilaWaaala) April 14, 2026
இந்த வீடியோவில் உள்ள நபர் எந்த மாதிரியான போதைப்பொருளைப் பயன்படுத்தினார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என உள்ளூர்வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்தச் செய்தி இணையதளங்களில் வெளியான வீடியோ மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. மேலும் இதே போன்ற முன்னதாக சத்தீஸ்கர் உள்ளிட்ட இரு மாநிலங்களில் இது போன்று சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
