ஆசிரியை ஒருவர் தனது மாணவனைத் தனியாகத் திரைப்படத்திற்கு அழைத்த வாட்ஸ்அப் உரையாடல் இணையத்தில் வெளியாகி, ஆசிரியர் – மாணவர் இடையிலான நன்னடத்தை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் (Reddit) தளத்தில் மாணவர் ஒருவர் தனது ஆசிரியை தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அந்த ஆசிரியை, “நாளை உனக்கு ஒரு வகுப்புதான் இருக்கிறது, என்னுடன் ‘புராஜெக்ட் ஹெயில் மேரி’ (Project Hail Mary) படம் பார்க்க வருகிறாயா?” என்று கேட்டுள்ளார். மேலும், “நீ சம்மதித்தால், இதற்காக நான் அரை நாள் விடுப்பு எடுக்கவும் தயார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அந்த மாணவர், “மன்னிக்கவும் மேடம், எனக்கு ஏற்கனவே நண்பருடன் வெளியே செல்லத் திட்டமுள்ளது” என்று நாகரீகமாக மறுத்துள்ளார். ஆனாலும் விடாத அந்த ஆசிரியை, அந்தத் திட்டத்தை மாற்றிவிட்டு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இறுதியில் மாணவர் பிடிவாதமாக மறுக்கவே, அந்த உரையாடல் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த உரையாடலைப் பகிர்ந்த அந்த 18 வயது மாணவர், “எனது பெயரை அவர் எப்போதும் ஒருவிதமான அதீத அன்போடுதான் அழைப்பார். இன்று அவர் சினிமாவுக்கு அழைத்தபோது நான் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பித்துவிட்டேன். எனக்கு 18 வயது, அவருக்கு 28 முதல் 29 வயது இருக்கலாம். ஒருவேளை இங்குப் பாலினம் மாறி இருந்திருந்தால் (ஆண் ஆசிரியர் – பெண் மாணவி) உங்கள் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி பகிரப்பட்ட இந்தப் பதிவு, ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  “இது ஒரு தவறான போக்கு. உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய். உனது பெற்றோரிடம் இதைக் கூறிவிடு. இதுபோன்ற ஆசிரியர்கள் பழிவாங்கும் நோக்கில் உனது மதிப்பெண்களைக் குறைக்க வாய்ப்புள்ளது என்று பலர் எச்சரித்துள்ளனர். இதைப் படிக்கும்போதே ஒருவிதமான சங்கடம் ஏற்படுகிறது. இதை எப்படிச் சிலர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு சிலர், “அவர் தனிமையில் வாடுபவராக இருக்கலாம், உங்களிடம் ஒரு நட்பை எதிர்பார்க்கலாம்  என்று ஆசிரியருக்கு ஆதரவாகவும் கருத்துப் பகிர்ந்துள்ளனர். பொதுவாகக் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். ஆனால், தனிப்பட்ட முறையில் மாணவர்களைச் சினிமாவுக்கு அழைப்பதும், அதற்காக விடுப்பு எடுப்பதும் தொழில்முறை ஒழுக்கத்திற்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.