திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே சாப்பலகொண்டா பகுதியை சேர்ந்தவர் வள்ளிமலர். இவருக்கு சுதாகர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதைத் தொடர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் வள்ளிமலருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
கடந்த ஜூன் 29ஆம் தேதி வள்ளிமலர் வீட்டிற்கு வந்த பிரேம்குமார், அங்கு புதிதாக வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டியை பார்த்து “இதை வாங்க என்னிடம் சொல்லாம போயிருக்கீங்க” என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து வள்ளிமலர், பிரேம்குமாருடன் தொடர்பை முறிக்க முடிவு செய்துள்ளார். இதனால் கொந்தளித்த பிரேம்குமார், வள்ளிமலருக்கு “நீ பேசாததால நானே விஷம் குடிச்சு செத்துருவேன்” என மிரட்டும் வகையில் புகைப்படங்களை அனுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஜூலை 19ஆம் தேதி வள்ளிமலர் வீட்டுக்கு வந்த அவர், பெட்ரோல் கொண்டு வந்து, “நான் இங்கே தீக்குளிக்க போகிறேன்” என்று மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான வள்ளிமலர், “நீ சாக வேண்டாம், நானே சாகுறேன்” என கூறி, சிறிதளவு பெட்ரோலை எடுத்துக் கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கு திடீரென தீ பற்றியதால் வள்ளிமலரை அருகிலிருந்த உறவினர்கள் மீட்டு வேலூரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி வள்ளிமலர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழக்கும் தருணத்தில் அவர் அளித்த வாக்குமூல வீடியோவில், “நான் கொஞ்சம் பெட்ரோல் தான் தெளிச்சேன். எப்படி தீப்பற்றியது எனக்கு தெரியல. பிரேம்குமார் என்ன காப்பாற்ற கூட வரல. அவரை சும்மா விடக்கூடாது” என உருக்கமாக தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து இம்மாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரேம்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
