உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 14 வயது சிறுமியை ஒரு காவல் துணை ஆய்வாளர் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ஆகியோர் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள காவல் அதிகாரியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கான்பூரின் சச்செண்டி பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி, கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு எஸ்யுவி (SUV) காரில் இருந்த இருவர் சிறுமியைக் கடத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் காவல்துறை சீருடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர்கள், காரிலேயே சுமார் இரண்டு மணி நேரம் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சிறுமியை அவர் வீட்டின் அருகே மயக்க நிலையில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
நள்ளிரவில் வீட்டின் அருகே அரை மயக்க நிலையில் கிடந்த சிறுமியை அவரது சகோதரர் கண்டெடுத்துள்ளார். உடனடியாக 112 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் அளித்தும், ஆரம்பத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அன்று உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் அளித்த பின்பே, கடத்தல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து கான்பூர் காவல் ஆணையர் ரகுபீர் லால் கூறுகையில், “முதலில் அடையாளம் தெரியாத நபர்கள் மீதே புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் காவல் துணை ஆய்வாளர் (Sub-Inspector) என்பது உறுதியாகியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்,” என உறுதி அளித்தார்.
