கேரள மாநிலம் ஆலப்புழையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த யாசகர் ஒருவரின் பையிலிருந்து ரூ.4.5 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனில் கிஷோர் என்பவர் நீண்டகாலமாக யாசகம் பெற்று (பிச்சை எடுத்து) வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அனில் கிஷோர் பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ஆலப்புழை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறிய அவர், வழக்கமாகத் தான் தங்கும் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டார். முறையான சிகிச்சை பெறாத நிலையில், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீஸார், அனில் கிஷோரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்த உடமைகளைச் சோதனையிட்டபோது போலீஸார் திகைத்துப் போயினர்.

அங்கிருந்த பைகளில் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை எண்ணிப் பார்த்தபோது மொத்தம் ரூ.4,52,207 இருந்தது தெரியவந்தது. மேலும், 12 சவுதி அரேபிய நாட்டு ரியால் நோட்டுகளும், தற்போது புழக்கத்தில் இல்லாத பழைய 2,000 ரூபாய் நோட்டுகளும் அந்தப் பையில் இருந்தன.

மருத்துவமனையில் அனில் கிஷோர் அளித்திருந்த முகவரியை வைத்து அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இருப்பினும், இதுவரை யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

“உயிரிழந்தவரின் வாரிசுதாரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உரிமை கோர யாரும் முன்வராத பட்சத்தில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டப் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று போலீஸார் தெரிவித்தனர்.