காதலித்த பெண்ணின் குடும்பத்தினரிடம் நற்பெயர் எடுப்பதற்காக, நண்பனை வைத்து அந்தப் பெண் மீது காரால் மோதச் செய்து விபத்து நாடகமாடிய வாலிபர்  கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன் (24). இவர் ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் ரஞ்சித்தின் காதலை ஏற்காமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பெண்ணின் மனதை மாற்றவும், அவரது குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெறவும் ரஞ்சித் ஒரு விபரீதத் திட்டத்தைத் தீட்டினார். சினிமா பாணியில் அந்தப் பெண் மீது ஒரு வாகனத்தை மோதச் செய்து, பின் தானே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் ‘ஹீரோ’வாக மாற நினைத்தார்.

இந்தத் திட்டத்திற்குத் தனது நண்பரான அஜாஸ் (19) என்பவரின் உதவியை நாடினார். இதன்படி, கடந்த மாதம் 23-ஆம் தேதி அந்தப் பெண் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திட்டமிட்டபடி அஜாஸ் தனது காரால் பெண் மீது மோதினார். இதில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டு, கையில் பலத்த காயமடைந்து உயிருக்குத் போராடினார்.

விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, மற்றொரு காரில் அங்கு வந்த ரஞ்சித் ராஜன், காயமடைந்த பெண்ணைப் பதற்றத்துடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இது தற்செயலாக நடந்த விபத்து என்று அனைவரும் நம்பிய நிலையில், போலீசாரின் தீவிர விசாரணை உண்மையை வெளிக்கொண்டு வந்தது.

விபத்தை ஏற்படுத்திய காரைக் கண்டறிந்த போலீசார், அஜாஸைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ரஞ்சித் ராஜனின் நண்பர் என்பதும், விபத்து நடந்த இடத்திற்கு ரஞ்சித் எப்படி உடனடியாக வந்தார் என்பதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இருவரிடமும் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலியைத் தன் வசப்படுத்த ரஞ்சித் ராஜன் போட்ட திட்டத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ரஞ்சித் ராஜன் மற்றும் அவரது நண்பர் அஜாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காதலுக்காகப் பெண்ணின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் விபத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.