வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49), அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அனில் அகர்வால் உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சுரங்கத் தொழில் மற்றும் கனிம வள மேம்பாட்டில் முன்னணியில் உள்ள வேதாந்தா குழுமத்தின் அங்கமான ‘தல்வண்டி சபோ பவர்’ (Talwandi Sabo Power Limited) நிறுவனத்தின் தலைவராக அக்னிவேஷ் அகர்வால் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் நிர்வாக உறுப்பினராகவும் அவர் பணியாற்றி வந்தார்.

அக்னிவேஷ் அகர்வால் சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அவர் நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனளித்து அவர் குணமடைந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

தனது மகனின் மறைவு குறித்து அனில் அகர்வால் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“இன்று என் வாழ்வின் இருண்ட நாள். என் அன்பு மகன் அக்னிவேஷ் எங்களை விட்டு மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டான். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த மகன், மோசமான நிலையைத் தாண்டி குணமடைந்து விடுவான் என்றே நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், விதி வேறு விதமான திட்டங்களை வைத்திருந்தது. திடீர் மாரடைப்பு மகனை எங்களிடமிருந்து பறித்துவிட்டது.

தனது குழந்தைக்கு விடை கொடுக்க வேண்டிய ஒரு பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நாங்கள் ஈட்டும் வருமானத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானதைச் சமூகத்திற்குத் திருப்பித் தருவதாக அக்னியிடம் நான் உறுதியளித்திருந்தேன். இன்று அந்த வாக்குறுதியை மீண்டும் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்.”

இவ்வாறு அவர் மிகுந்த மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்தின் வாரிசாகக் கருதப்பட்ட அக்னிவேஷ் அகர்வாலின் இந்தத் திடீர் மறைவு, தொழில்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.