மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டித்த தாயின் செயலால் மனமுடைந்த 5-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் சூடாமணி திவேதி.
இவருடைய 11 வயது மகன் ரிதுராஜ் திவேதி, செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் தனது நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். இதனைப் பார்த்த அவனது தாய், ஊர் சுற்றாமல் வீட்டிற்குச் சென்று படிக்குமாறு கண்டித்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த சிறுவன், கால்நடைத் தீவனங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவைத் தட்டியும் எந்தப் பதிலும் இல்லை.
இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரிதுராஜ் தனது தந்தையின் துண்டால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தலா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுவன் ஆரம்பத்திலிருந்தே அதிக முன்கோபம் கொண்டவன் என்றும், இதற்கு முன்னரும் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டான் என்றும் அவனது தந்தை காவல்துறையிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
