கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள வயாலிகாவல் பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவர், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் மீது காதல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார். வயாலிகாவல் காவல் நிலையம் எல்லைக்குள் வசித்து வரும் அந்த பெண் பிரபல ஆடை வடிவமைப்பாளராக (Fashion Designer) உள்ளார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில், சென்னை அருகே உள்ள இ.வி.பி. பிலிம் சிட்டி என்ற திரைப்பட நகரின் உரிமையாளரும் தொழில் அதிபருமான சந்தோஷ் ரெட்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகாரில் அந்த பெண் கூறியதாவது: நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டியுடன் அவருடைய உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்கான ஆடைகள் வடிவமைக்கும் பணியின் போது அறிமுகமானேன்.
அதன்பின் நாங்கள் கைபேசி வழியாகப் பழகி, குடும்ப நண்பர்களாக மாறினோம். சில சமயங்களில் அவர் எனது வீட்டுக்கு வந்து சென்றார். எனது தொழிலில் முதலீடு செய்வதாகவும் கூறினார். பின்னர் திடீரென அவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவர் என்னை தாக்கியதுடன், என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். எனவே அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது, பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டு உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்பே தெரிவிக்கும்,” என்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டி தரப்பில் விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
